Wednesday, September 25, 2013

நீயும் பெண்தானோ?

வெகு சாதாரணமான ஒரு நாளின் முடிவில்,  முற்றும் யோசனைகளோடும் உணர்ச்சிகளோடும் பல காலம் வசிக்கும் தெருவில் அனிச்சையாய் வண்டியைச் செலுத்தி வீட்டினுள்  சென்று செருப்பைக் உதறி உடை மாற்றி முகம் கழுவி , தாய்மடி சாய்ந்து அன்றைய உணர்வுகள் எதுவோ மகிழ்வு, கோபம், துக்கம், வீரம், கையாலாகாத தனம், அழுகை என  எல்லாவற்றயும் கொட்டிவிட்டு, அக்காவுடனோ தங்கையுடனோ சண்டையிட்டு விளையாடி, பாட்டியிடம் கதைகேட்டு நிம்மதியாய் உறங்கச்  செல்வோம்.

சரி, இதனால் என்ன என்ற கேள்வியா? விட்டு விடுங்கள்.இந்நிகழ்வுகளை பிறகு மீண்டும் கிளறுவோம்

உபரியாய் இருக்கும் எதன் மீதுமே நாம் கவனம் செல்வது இல்லை. பெரும் கண்டங்களை இணைத்து பிரம்மாண்டமாய் இருந்தாலும் , பூமிப் பந்தில் மூன்றில் இரண்டு பங்கு நீரே என்று படித்ததாலோ என்னவோ எனக்கு நீர்நிலைகளின் மேல் பிரியமே இல்லமல் இருந்தது.

அதிகம் வெயிலை மட்டுமே பார்த்த பகுதியில் வளர்ந்து எப்போதாவது கடலை அரிய காட்சிப் பொருளாகக் கண்ட எனக்கு சென்னை வாசம் வழக்கப் படுத்திய ஒரு இடம் கடல். குறிப்பிட்டுச் சொன்னால் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை.



வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருந்தது ரொம்பவே வசதி. இரண்டு வருட சென்னை வாசத்தில் வீட்டுக்கு வெளியே அலுவலகம் தவிர்த்து அதிகம் காற்றில் என் சுவாசம் கலந்த பகுதி அதுவே எனலாம்.அதிகாலை விழிப்போ, நேரம் சென்ற இரவுத்தூக்கமோ கடற்கரை இல்லாமல் இருந்த்தாய் ஒரு நாள் கூட நினைவு இல்லை.

ஆரம்ப காலத்தில்  சுடராய் இருந்த கடலாசைக் கொள்ளியில்  வெகுவாய் எண்ணெய் ஊற்றிய பாவம் பொன்னியின் செல்வன் வழியாக கல்கியைச் சேரும்.சிவகாமியின் சபதம் கூட. சோழர்களையும்  பல்லவர்களையும் ஆட்கொண்ட கடல் என்னையும் விடுமா என்ன?


 

நட்புகளைச் சந்திக்க ஓர் இடமாய் அறிமுகமாகி பின் பல நாட்கள் தனியே நள்ளிரவில் காவலர் விரட்டும் வரை மணிக்கணக்கில் கடலையே வெறித்த கணங்கள் உண்டு.

அலையோசை மட்டுமே எஞ்சி இருக்கும் அந்நேரத்தில் சொற்ப  மனிதர்களோ அல்லது யாருமே இல்லாத வங்காளக்கரை மணல் பரப்பை நிலவொளியில் அதிகம் கண்ட பாக்கிய நாட்கள் எண்ணிலடங்கா.
 
தனியே காயும் நிலா மகளையும் நட்சத்தரங்களையும் வெற்று மணலில் மல்லாக்கக் கிடந்து ரசித்த மணிகள்.

 ஆமை நடை ( Turtle walk) என்று ஆமை முட்டைகளைப்
 பாதுகாக்க விடிய விடிய கடலோரம் நடந்த இரவுகள்.

சூரிய உதயம் கண்டு, பின் சிப்பிகள் பொறுக்கி,  பொந்துகளில் ஓடி மறையும் நண்டுகளை விரட்டிய காலைகள்




கடலும் காதலியும் மட்டுமே எப்போதும் சலிக்காமல் பார்க்கப் பார்க்க புதிதாய்த் தோன்றும் என்பார்கள். இவ்விரண்டில் என் கடல் அனுபவம் மிகப் பரிச்சயம்.





2012 அக்டோபர், " நீலம்" சூறாவளி தமிழ் நாட்டின் பல பகுதிகளில் சூரையாடிக்கொண்டிருந்த சமயம், புயலின் மையம் சென்னையைத் தாக்கி கரையைக் கடக்கும் என்று செய்தி.விடாத மழை, காற்றின் வேகத்தில் முன்னேற முடியாத வாகனங்கள், சாயும் மரங்கள். இச்சூழலில் கடலைத் தனியாய்த் தத்தளிக்க விட மனமில்லாமல் துணைக்குச் சென்றேன்.வெளியே தடுத்து நிறுத்திய காவலர்களின் கண்ணில் மண்ணைத் தூவி உள்ளே சென்றால் புயல் ஈர மணலை முகத்தில் வீசி வரவேற்றது. பாதி மணல் பரப்பு வரை அலை பாய்ந்தது.

அங்கே எனக்கு முன்னால் இரண்டு பேர் தேவுடு காத்துக் கொண்டிருந்தனர். "புயல் நேரத்துல பீச்சுக்கு வந்திருக்காய்ங்க பாரேன், ஏதோ பைத்தியம் போல" என்று எண்ணி நானும் சேர்ந்துகொண்டேன். நேரம் சென்று காவலர்கள் வந்து விரட்ட வெளியே வர வேண்டியதாயிற்று. அங்கு ஒருவர் மனைவி, சிறு மகன் மகள் சகிதம் காரில் வந்திறங்கி விழா வேடிக்கை காட்டிகொண்டிருந்தார்.ரசனைக்கார குடும்பம் போல.

2012 நில நடுக்கம். சரியாக மாலை ஐந்து மணி பத்து நிமிடத்திற்கு சென்னையை சுனாமி தாக்கும் என செய்தி கண்டதே தாமதம். வேகமாக கடலுக்கு விரைந்தால், சாந்த சொரூபியாய் ஒரு காட்சி.ஏமாற்றம். சுனாமி வரவில்லை.


கொஞ்ச நாட்களில் உடனிருந்த நண்பர்கள் வேறு ஊர்களுக்குச் செல்ல, எங்கிருந்தோ பிழைப்புக்காக வெகு தோரம் குடும்பத்தை விட்டு வந்து ஆயிரமாயிரம் கனவுகளுடன் திரிபவனுக்கு கடலன்றி வேறு யார் துணை?

மீண்டும் முதல் பத்திக்குப் போகலாம்.

வேலை நேரமும் நாளும் முடியும் நேரத்தில் அனிச்சையாய் கரைக்கு வந்து. கடல் மடியிலே உணர்ச்சிகளைக் கொட்டி, நீரில் கால் நனைத்து விளையாடி, அலையோசைக் கதைகள் கேட்டு, பின் உறக்கம்.



இன்றும் சென்னை சென்று இறங்கும் ஒவ்வொரு அதிகாலையும் கடல் மடியிலேயே உதயம். தினசரி விஜயம். பின் வேலை முடித்துக் கிளம்பும்போது மனதில் ஏதோ ஒரு இனம் புரியா பாரம் ஏறும். வழியனுப்பி வைக்க வரும் நண்பன், "எந்த வழியா பஸ் ஸ்டாண்ட் போகலாம்?" என்றால் "பீச்சுக்கு போய்ட்டு அப்டியே போலாம் " என்றே பதில் ஆகிறது

"நதியே நீயும் பெண் தானோ" என்றார் வைரமுத்து.சிலர் அன்னையென்று கூட அழைப்பர். தாயாய், தங்கையாய் , தோழியாய், யாதுமாய் இருக்கும் இவளை யான் எங்கனம் அழைப்பது? 

No comments:

Post a Comment